Couplet-0420

குறள் எண் Couplet Noபால்இயல்அதிகாரம் Chapter
0420பொருள்  அரசியல்கேள்வி
Knowledge Through Listening
செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள்      

அவியினும் வாழினும் என்

செவியின் சுவை உணரா மாக்கள் அவியினும் வாழினும் என்.

பரிமேலழகர் உரை

செவியிற் சுவை உணரா வாய் உணர்வின் மாக்கள்= செவியான் நுகரப்படும் சுவைகளை உணராத வாயுணர்வினையுடைய மாந்தர்;
அவியினும் வாழினும் என்= சாவினும் வாழினும் உலகிற்கு வருவுது என்னை?

விளக்கம்

செவியான் நுகரப்படும் சுவைகளாவன: சொற்சுவையு்ம பொருட்சுவையும். அவற்றுட் சொற்சுவை குணம், அலங்காரமென இருவகைத்து.பொருட்சுவை காமம், நகை, கருணை, வீரம், உருத்திரம், அச்சம், இழிப்பு, வியப்பு, சாந்தம் என ஒன்பது வகைத்து. அவையெல்லாம் ஈண்டுரைப்பிற் பெருகும். 'வாயுணர்வு' என்பது இடைப்பதங்கள் தொக்குநின்ற மூன்றாம் வேற்றுமைத்தொகை; அது வாயான் நுகரப்படும் சுவைகளை உணரும் உணர்வென விரியும். அவை கைப்பு, கார்ப்பு, புளிப்பு, உவர்ப்பு, துவர்ப்பு, தித்திப்பு என ஆறாம். செத்தால் இழப்பதும், வாழ்ந்தாற் பெறுவதும் இன்மையின் இரண்டும் ஒக்கும் என்பதாம். வாயுணவின் என்று பாடம் ஓதுவாரும் உளர்.
இவை மூன்று பாட்டானும் கேளாதவழிப்படும் குற்றம் கூறப்பட்டது.