Couplet-0363

குறள் எண்
Couplet No
பால்இயல்அதிகாரம் Chapter
0363அறம்துறவறம்அவாவறுத்தல்
Giving up Desires
வேண்டாமை அன்ன விழுச்செல்வம் ஈண்டில்லை

ஆண்டும்அஃது ஒப்பது இல்

வேண்டாமை அன்ன விழுச் செல்வம் ஈண்டு இல்லை
ஆண்டும் அஃது ஒப்பது இல்.

பரிமேலழகர் உரை

வேண்டாமை அன்ன விழுச் செல்வம் ஈண்டு இல்லை= ஒரு பொருளையும் அவாவாமையை ஒக்கும் விழுமிய செல்வம் காணப்படுகின்ற இவ்வுலகின்கண் இல்லை; ஆண்டும் அஃது ஒப்பது இல்= இனி அவ்வளவேயன்று, கேட்கப்படுகின்ற துறக்கத்தின்கண்ணும் அதனை ஒப்பதில்லை.

விளக்கம்

மக்கள்செல்வமும் தேவர்செல்வமும் மேன்மேல்நோக்கக் கீழாதல் உடைமையின், தனக்கு மேலில்லாத வேண்டாமையை 'விழுச்செல்வம்' என்றும், அதற்கு இரண்டு உலகினும் ஒப்பது இன்மையின் 'அஃதொப்பதில்லை' என்னும் கூறினார். ஆகமஅளவை போலாது காட்சி அளவையான் எல்லாரானும் தெளியப்படுதலின், மக்கள் செல்வம் வகுத்து முற்கூறப்பட்டது.
பிறவாமைக்கு வழியாமெனவும், விழுச்செல்வமாம் எனவும் வேண்டாமையின் சிறப்பு இவ்விரண்டு பாட்டானும் கூறப்பட்டது.