Couplet-0392

குறள் எண்
Couplet No
பால்இயல்அதிகாரம் Chapter
0392பொருள்  அரசியல்கல்வி Education
எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்

கண்ணென்ப வாழு ம்உயிர்க்கு

எண் என்ப ஏனை எழுத்து என்ப இவ்விரண்டும்
கண் என்ப வாழும் உயிர்க்கு

பரிமேலழகர் உரை

எண் என்ப ஏனை எழுத்து என்ப இவ்விரண்டும்= அறியாதார் எண்ணென்று சொல்லுவனவும் மற்றை எழுத்து என்று சொல்லுவனுமாகிய கலைகள் இரண்டினையும்; வாழும் உயிர்க்குக் கண் என்ப= அறிந்தார் சிறப்புடை உயிர்கட்குக் கண் என்று சொல்லுவர்


விளக்கம்

'எண்'ணென்பது கணிதம். அது கருவியுஞ் செய்கையும் என இருவகைப்படும். அவை ஏரம்ப முதலிய நூல்களுட் காண்க. 'எழுத்'தெனவே, அதனோடு ஒற்றுமையுடைய சொல்லும் அடங்கிற்று. இவ்விருதிறமும், அறமுதற் பொருளைக் காண்டற்குக் கருவியாகலின் 'கண்'ணெனப்பட்டன. அவை கருவியாதல்,
"ஆதி முதலொழிய வல்லா தனவெண்ணி

நீதி வழுவா நிலைமையவான்- மாதே

அறமார் பொருளின்பம் வீடென் றிவற்றின்

திறமாமோ எண்ணிறந்தாற் செப்பு";

"எழுத்தறியத் தீரும் இழிதகைமை தீர்ந்தான்

மொழித்திறத்தின் முட்டறுப்பான் ஆகும்- மொழித்திறத்தின்

முட்டறுத்த நல்லோன் முதனூற் பொருளுணர்ந்து

கட்டறுத்து வீடு பெறும்"

இவற்றான் அறிக.

'என்ப' வென்பவற்றுள், முன்னைய இரண்டும் அஃறிணைப் பன்மைப் பெயர்; பின்னது உயர்திணைப் பன்மைவினை. 'அறியாதார்', 'அறிந்தார்' என்பன வருவிக்கப்பட்டன. 'சிறப்புடையுயிர்' என்றது, மக்கள் உயிருள்ளும் உணர்வு மிகுதி உடையதனை.

இதனால் கற்கப்படும் நூல்கட்குக் கருவியாவனவும் அவற்றது இன்றியமையாமையும் கூறப்பட்டன.