Couplet-0364

குறள் எண்
Couplet No
பால்இயல்அதிகாரம் Chapter
0364அறம்துறவறம்அவாவறுத்தல்
Giving up Desires
தூஉய்மை என்பது அவாஇன்மை மற்றது

வாஅய்மை வேண்ட வரும்

தூஉய்மை என்பது அவா இன்மை மற்று அது
வாஅய்மை வேண்ட வரும்

பரிமேலழகர் உரை

தூஉய்மை என்பது அவாவின்மை= ஒருவர்க்கு வீடு என்று சொல்லப்படுவது அவாஇல்லாமை; அது வாய்மை வேண்ட வரும்= அவ்வவாஇல்லாமைதான் மெய்ம்மையை வேண்டத் தானே உண்டாம்.

விளக்கம்

வீடாவது உயிர் அவிச்சை முதலிய மாசு நீங்குதலாகலின், அதனைத் 'தூய்மை' என்றும், காரணத்தைக் காரியமாக உபசரித்துத் 'தூய்மையென்பது அவாவின்மை' என்றும், மெய்ம்மையுடைய பரத்தை ஆகுபெயரான் மெய்ம்மை என்றும் கூறினார். 'மற்று' மேலையதுபோல வினைமாற்றின்கண் வந்தது. 'வேண்டுதல்', இடைவிடாது பாவித்தல். அவாவறுத்தல், வீட்டிற்குப் பரம்பரையான் அன்றி நேரே ஏது என்பதூஉம் அது வரும் வழியும் இதனால் கூறப்பட்டன.