Couplet-0358

குள் எண் Couplet Noபால்இயல்அதிகாரம் Chapter
0358அறம்துறவறம்மெய்யுணர்தல்
Realization of Supreme Truth
பிறப்புஎன்னும் பேதைமை நீங்கச் சிறப்புஎன்னும்

செம்பொருள் காண்பது அறிவு

பிறப்பு என்னும் பேதைமை நீங்கச் சிறப்பு என்னும்
செம்பொருள் காண்பது அறிவு.

பரிமேலழகர் உரை

பிறப்பு என்னும் பேதைமை நீங்க= பிறப்பிற்கு முதற்காரணமாய அவிச்சைகெட; சிறப்பு என்னும் செம்பொருள் காண்பது அறிவு= வீட்டிற்கு நிமித்தகாரணமாய செவ்விய பொருளைக் காண்பதே ஒருவர்க்கு மெய்யுணர்வாவது.

விளக்கம்

'பிறப்பென்னும் பேதைமை' எனவும், 'சிறப்பு என்னும் செம்பொருள்' எனவும், காரியத்தைக் காரணமாக உபசரித்தார். ஐவகைக் குற்றங்களுள் அவிச்சை ஏனைய நான்கிற்கும் காரணமாதலுடைமையின், அச்சிறப்புப்பற்றி அதனையே பிறப்பிற்குக் காரணமாக்கிக் கூறினார். எல்லாப்பொருளினும் சிறந்ததாகலால் வீடு 'சிறப்பு' எனப்பட்டது. தோற்றக் கேடுகள் இன்மையின் நித்தமாய், நோன்மையாற் தன்னையொன்றுங் கலத்தலின்மையிற் தூய்தாய்த், தான் எல்லாவற்றையும் கலந்து நிற்கின்ற முதற்பொருள் விகாரமின்றி எஞ்ஞான்றும் ஒருதன்மைத்தாதல் பற்றி, அதனைச் செம்பொருள் என்றார். மேல் 'மெய்ப்பொருள்'(குறள், 355) எனவும், 'உள்ளது'(குறள், 357) எனவும் கூறியதூஉம் இதுபற்றி என உணர்க. அதனைக் காண்கையாவது, உயிர் தன் அவிச்சை கெட்டு அதனோடு ஒற்றுமையுற இடைவிடாது பாவித்தல்; இதனைச் சமாதியெனவும், சுக்கிலத்தியானம் (சீவகசிந்தாமணி, முத்தியிலம்பகம்-483) எனவும் கூறுப. உயிர் உடம்பின் நீங்குங்காலத்து அதனால் யாதொன்று பாவிக்கப்பட்டது, அஃது அதுவாய்த் தோன்றுமென்பது எல்லா ஆகமங்கட்கும் துணிபாகலின், வீடு எய்துவார்க்கு அக்காலத்துப் பிறப்பிற்கேதுவாய பாவனை கெடுதற்பொருட்டுக் கேவலப்பொருளையே பாவித்தல் வேண்டுதலான் அதனை முன்னே பயிறலாய இதனின் மிக்க உபாயம் இல்லையென்பது அறிக.

இதனாற் பாவனை கூறப்பட்டது.