தமிழ்மொழியின் பேச்சு வழக்கில் சம்ஸ்க்ருதச் சொற்கள்
அனைவருக்கும் வணக்கம்.
இந்தத் பதிவில், தமிழ்மொழியின் பேச்சு வழக்கில் அன்றாடம் பயன்படுத்தும் 1000+ சம்ஸ்க்ருதச் சொற்களும், தமிழ்மொழியில் அதற்கு நிகரான சொற்களும் மற்றும் ஆங்கில மொழியில் அவற்றின் பொருளும் கொடுக்கப்பட்டுள்ளன.
தமிழ்ப் படைப்புகளில் வடமொழிச் சொற்களை அறவே தவிர்க்க வேண்டும் என்ற கருத்தும், அச்சொற்களை தேவைகளுக்கு ஏற்றார் போல், தமிழின் தனித்தன்மைக்கு ஊறு விளைவிக்காத அளவுக்கு பயன்படுத்துவது தவறல்ல என்ற ஒரு கருத்தும், இன்றளவும் விவாதிக்கப்படுகிறது. வடமொழிச் சொற்களை பயன்படுத்துவது தவறல்ல என்ற கருத்திற்கு ஒப்பப் பொருள்பட அமைந்துள்ளது தொல்காப்பியரின் கீழ்க்கண்ட பாடல் வரிகள்.
இயற்சொல் திரிசொல் திசைச்சொல் வடசொல் என்று
அனைத்தே செய்யுள் ஈட்டச் சொல்லே.
திருக்குறளில் கையாளப்பட்டுள்ள வடமொழிச் சொற்கள்
ஆதி, பகவன், உலகு, குண, பூசனை, தானம், தவம், தெய்வம், மங்கலம், காலம், வாணிகம், நீர், கருமம், ஆசை, பூதங்கள், கோடி, நாமம், காமம், நாகரிகம், அதி,மதி, பதி,தூது, முகம், நாகம், மீன், குல,குடும்ப, தேவர், புருவம், வளை.
ஆத்திச்சூடியில் கையாளப்பட்டுள்ள வடமொழிச் சொற்கள்
வஞ்சகம் பேசேல், கடிவது மற, காப்பது விரதம், குணமது கைவிடேல், சக்கர நெறி நில், சித்திரம் பேசேல், தானமது விரும்பு, தெய்வம் இகழேல், தேசத்தோடு ஒட்டி வாழ், நீர் விளையாடேல். பூமி திருத்தி உண், மனம் தடுமாறேல், மூர்க்கரோடு இணங்கேல், மோகத்தை முனி, வாது முற்கூறேல், வித்தை விரும்பு, உத்தமனாய் இரு.
திரு. மறைமலை அடிகள் ஒரு புகழ் பெற்ற தமிழறிஞர். தமிழையும் வடமொழியையும் ஆங்கிலத்தையும் நன்கு கற்றவர். தமிழில், வடமொழிக் கலப்பின்றித் தூய நடையில் எழுதிப் பிறரையும் அவ்வாறு செய்ய ஊக்குவித்தவர். சாகுந்தலா நாடகத்தை வடமொழியில் இருந்து தமிழில் மொழி பெயர்த்துள்ளார்.
மனோன்மணீயம் பெ. சுந்தரம் பிள்ளை, மனோன்மணீயம் என்ற புகழ்பெற்ற நாடக நூலைப் படைத்தவர். மனோன்மணீயத்தில் இடம்பெற்ற தமிழ்த் தாய் வணக்கப் பாடலான “நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்” என்ற பாடல் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலாக அறிவிக்கப்பட்டது. அப்பாடலில் இடம் பெற்றுள்ள, “ஆரியம் போல் உலக வழக்கு ஒழிந்து” என்ற பாடல் வரிகளுக்கு, அவர் வடமொழியையும் ஆகமங்களையும் ஏற்காதவர் என்ற ஒரு தவறான கருத்தினை சிலர் பரப்பி வருகின்றனர். “ஆரியம்போல் உலக வழக்கு ஒழிந்து” என்று அவர் கூறியதற்கு அவரே தந்த விளக்கம் – உலகு வழக்கு அழிதலாவது: ‘இப்பொழுது எந்த நாட்டிற்கும் சொந்த மொழியாக வழங்காமை. இதனால் தான் தேவ பாஷை என வழங்குவது போலும்.’
அவர் எழுதிய மனோன்மணீயத்தில் 700க்கும் மேற்பட்ட வடமொழிச் சொற்களைப் பயன்படுத்தியுள்ளார்.
திரு. எஸ்.வையாபுரிப் பிள்ளை அவர்களின் தமிழ் இலக்கிய பங்களிப்பு, கால ஆராய்ச்சி மற்றும் தமிழில் பேரகராதித் தொகுப்பு என்று பன்முகப்பட்டதாக இருந்தது. உ.வே. சாமிநாதய்யருக்குப் பிறகு பழந்தமிழ் இலக்கியங்களைத் தொகுத்து, ஆய்வு செய்து வெளியிட்ட பெருமை எஸ். வையாபுரிப் பிள்ளையைச் சாரும். வையாபுரிப் பிள்ளையின் மேஜையில் எப்போதும் மானியர் வில்லியம்சின் சம்ஸ்கிருத-ஆங்கில அகராதி இருக்கும். “”எந்தச் சான்றையும் கூடிய மட்டிலும் மூல நூலிலிருந்து அறிந்திட வேண்டும். ஆய்வில் பிறர் சொல்லை நம்புவது தகாது. சம்ஸ்கிருதச் சான்றுகளை நாமே படித்துப் பொருள் அறிதல் நல்லது. அதனால் தமிழ் ஆராய்ச்சியாளர்கள் நிச்சயம் சம்ஸ்கிருதம் தெரிந்தவர்களாக இருக்க வேண்டும்” என்பது எஸ்.வி.பியின் கருத்து.
வடமொழிச் சொற்களை தேவைகளுக்கு ஏற்றார் போல் பயன்படுத்துவது தமிழின் வளர்ச்சிக்கு சாதகமாகவே அமையும் என்கின்ற கருத்தினை அடிப்படையாகக் கொண்டது இந்தப் பதிவு.
ஒன்றுபட்ட இந்தியாவை பிளவுபடுத்தும் நோக்கத்துடன், சம்ஸ்க்ருத மொழி பற்றிய தவறான கருத்துகள், அரசியல் காரணங்களுக்காக, மக்களிடையே பரப்பப்பட்டன. கடந்த காலச் சரித்திரத்தை தங்களுக்கு வேண்டியபடி மாற்றியும், திரித்தும், கூட்டியும், குறைத்தும், மறைத்தும், புதைத்தும், சரித்திரம் என்ற பெயரால் நூல் வரைந்து தம் ஆட்சியில் அடங்கிய மக்கள் மீது திணித்து வந்தனர்.
சென்ற 10 ஆண்டுகள் வரை, மொழி ஆராய்ச்சியாளர்களால் மட்டுமே திரட்டக்கூடிய தகவல்கள், இன்றைய கணினி சார்ந்த தொழில்நுட்ப வளர்ச்சியால், வலை தளங்களிளலும், தகவல் களஞ்சியங்களிலும், காணப்படுகின்றன. அத்தகைய வலை தளங்களில், ஒவ்வொரு கருத்திற்க்கான வரலாற்றுப் பின்னணிகளும், விவாதங்களும், மாற்றுக்கருத்து பற்றிய விமர்சனங்களும், காணப்படுகின்றன. சாமானிய மக்களால் கூட சரித்திர உண்மைகளை எளிதாக அறிந்து கொள்ள முடியும்.
திருவள்ளுவரின் கூற்று,
எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும்
அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு
என்பது இப்பொழுது சாத்தியப்பட்டுள்ளது. வல்லான் வகுத்ததே வாய்க்கால். ஆட்சியாளர்கள் எழுதியதே வரலாறு என்ற நிலை இன்று மாறியுள்ளது.
பாரதியார் “சரித்திரத் தேர்ச்சி கொள்” என்று ஆணையிட்டார்.
இந்த வாய்ப்பினை முழுவதும் பயன்படுத்தி, தமிழ் மற்றும் சம்ஸ்க்ருத மொழிகளுக்கு இடையே சென்ற நூற்றாண்டு வரை, நிலவிய ஆரோக்கியமான பரிவர்த்தனைகளை, மீண்டும், புதுப்பிக்க, முயற்சிகளை மேற்க்கொள்ள வேண்டும் என்ற பின்னணியில் உருவானது இந்தப் பதிவு.
தமிழர்களாகிய நாம், பன்மொழித் திறமைகளை வளர்த்துக் கொண்டு, பாரதியின் “தமிழன் என்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா” என்ற கனவை, நிறைவேற்றுவோம்.
இந்தப் பதிவில், புதிய சொற்களும், திருத்தங்களும் தொடர்ந்து மேற்கொள்ளப்படும். தமிழ் இலக்கிய நூல்களிலிருந்து முழு நிகர்ச் சொற்கள், உங்கள் ஆலோசனைகள் மற்றும் திருத்தங்களை கீழேயுள்ள பகுதியில் பதிவிடுமாறு உங்களை வேண்டுகிறோம்.