Couplet-0027

குறள் எண்
Couplet No
பால்இயல்அதிகாரம்-Chapter
The Greatness of Ascetics
0027அறம்பாயிரம்நீத்தார் பெருமை
சுவைஒளி ஊறுஓசை நாற்றமென்று ஐந்தின்
வகைதெரிவான் கட்டே உலகு.

சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் என்று ஐந்தின்
வகை தெரிவான் கட்டே உலகு.

Suvaioli Ooruosai Naatramendru Aindhin
Vakaidherivaan Katte Ulaku.

பரிமேலழகர் உரை:

இதன் பொருள்) சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் என்ற ஐந்தின் வகை = சுவையும் ஒளியும் ஊறும் ஓசையும் நாற்றமும் என்று சொல்லப்பட்ட (தன்மாத்திரைகள்) ஐந்தனது கூறுபாட்டையும்;
தெரிவான் கட்டே உலகு = ஆராய்வான் கண்ணதே உலகம்.

பரிமேலழகர் உரை விளக்கம்:

அவற்றின் கூறுபாடாவன- பூதங்கட்கு முதலாகிய அவைதாம் ஐந்தும், அவற்றின் கண் தோன்றிய அப்பூதங்கள் ஐந்தும், அவற்றின் கூறாகிய ஞானேந்திரியங்கள் ஐந்தும், கன்மேந்திரியங்கள் ஐந்தும் ஆக இருபதுமாம்.
'வகைதெரிவான் கட்டு' என உடம்பொடுபுணர்ந்த♥தனால், தெரிகின்ற புருடனும், அவன் தெரிதற் கருவியாகிய மான் ஆங்கார மனங்களும், அவற்றிற்கு முதலாகிய மூலப்பகுதியும் பெற்றாம்.
தத்துவம் இருபத்தைந்தனையும் தெரிதலாவது, மூலப்பகுதி ஒன்றில் தோன்றியது அன்மையின் பகுதியே யாவதல்லது விகுதியாகாது எனவும், அதன்கண் தோன்றிய மானும், அதன்கண் தோன்றிய அகங்காரமும், அதன்கண் தோன்றிய தன்மாத்திரைகளும் ஆகிய ஏழும் தத்தமக்கு முதலாயதனை நோக்க விகுதியாதலும், தங்கண் தோன்றுவனவற்றை நோக்கப் பகுதியாதலும் உடையவெனவும், அவற்றின்கண் தோன்றிய மனமும் ஞானேந்திரியங்களும் கன்மேந்திரியங்களும் பூதங்களுமாகிய பதினாறும் தங்கண் தோன்றுவன இன்மையின் விகுதியேயாவதல்லது பகுதியாகாவெனவும், புருடன் தான் ஒன்றில் தோன்றாமையானும் தன்கண் தோன்றுவன இன்மையானும், இரண்டும் அல்லன் எனவும் சாங்கிய நூலுள் ஓதியவற்றான் ஆராய்தல்.
இவ்விருபத்தைந்துமல்லது உலகெனப் பிறிது ஒன்று இல்லையென உலகினது உண்மையறிதலின் அவனறிவின் கண்ணதாயிற்று.
இவை நான்கு பாட்டானும் பெருமைக்கு ஏது ஐந்தவித்தலும், யோகப்பயிற்சியும், தத்துவ உணர்வும் என்பது கூறப்பட்டது.

The world is within the knowledge of him who knows the properties of taste, sight, touch, hearing and smell.

Leave a comment