Couplet-0350

குறள் எண்
Couplet No
பால்இயல்அதிகாரம் Chapter
0350அறம்துறவறம்துறவு
Renunciation
பற்றுக பற்றுஅற்றான் பற்றினை அப்பற்றைப்

பற்றுக பற்று விடற்கு

பற்றுக பற்று அற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு.

பரிமேலழகர் உரை

பற்று அற்றான் பற்றினைப் பற்றுக= எல்லாப் பொருளையும் பற்றிநின்றே பற்றற்ற இறைவன் ஓதிய வீட்டு நெறியை இதுவே நன்னெறியென்று மனத்துட் கொள்க; அப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு= கொண்டு, அதன்கண் உபாயத்தை அம்மனத்தாற் செய்க, விடாது வந்த பற்று விடுதற்கு.

உரைவிளக்கம்

கடவுள் வாழ்த்திற்கு ஏற்ப ஈண்டும் பொதுவகையான் 'பற்றற்றான்' என்றார். 'பற்றற்றான் பற்று' என்புழி, ஆறாவது செய்யுட்கிழமைக்கண்[1] வந்தது. ஆண்டுப் பற்று' என்றது பற்றப்படுவதனை. 'அதன்கண் உபாயம்' என்றது தியானசமாதிகளை. 'விடாது வந்த பற்று' என்றது, அநாதியாய் வரும் உடம்பிற் பற்றினை. அப்பற்று விடுதற்கு உபாயம் இதனால் கூறப்பட்டது.