தமிழும் சம்ஸ்க்ருதமும்

தமிழ் மற்றும்  சம்ஸ்க்ருத மொழிகளின் வரலாறு

உலகின் தொன்மைான மொழிகளின் பட்டியலில் இடம்பெற்றுள்ள தமிழும், சம்ஸ்க்ருதமும் இந்திய நாட்டின் மொழிகள். இவ்விரு மொழிகளும், கிமு நான்காம் நூற்றாண்டு வரை ஒலி வடிவிலேயே, பேச்சு வழக்கில் இருந்தது. அத்தகைய ஒலிகளை, வரிவடிவில் வெளிப்படுத்துவதற்கான நடைமுறை தோன்றிய பின், இவ்விரு மொழிகளில் பதியப்பட்ட வரலாற்றுச் சான்றுகள் மூலம், அந்தந்தக் கால கட்டங்களில் வாழ்ந்த மக்கள், அவர்களின் வாழ்க்கை முறை, நாகரிகம், அரசியல் அமைப்பு, அரசாட்சி முறை, வர்த்தகம், வழக்கிலுள்ள மொழிகள் பற்றிய பல செய்திகளை அறிய முடிகிறது. அம்மொழிகளின் வரிவடிவ அமைப்பு, இலக்கண, இலக்கியங்கள் பற்றிய பல செய்திகளையும் அறிய முடிகிறது.

கிளை மொழிகள்

தமிழ் மொழியானது, தமிழ்நாட்டில் வழக்கில் உள்ளது. தமிழ் மற்றும் சம்ஸ்க்ருதம் ஆகிய மொழிகளை அடிப்படையாகக் கொண்டு தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாள மொழிகளாக தென்னிந்தியாவின் மற்ற பிரதேசங்களில் வழக்கில் உள்ளது. சம்ஸ்க்ருதமானது ஹிந்தி, பெங்காலி, மராத்தி, குஜராத்தி, அசாமிமற்றும் வேறு சில வேறுபாடுகளுடன் பல பிராந்திய மொழிகளாக, வட மாநிலங்களில், வழக்கில் உள்ளது.

சென்ற நூற்றாண்டில் சம்ஸ்க்ருத மொழியின் நிலை

இந்தியாவில் சம்ஸ்க்ருத மொழி, பல நூற்றாண்டுகளாக, பரவலானப் பகுதிகளில், வழக்கில் இருந்தது. பிறகு, இந்தியாவை 900 ஆண்டுகளுக்கும் மேலாக, ஆக்ரமித்த ஒன்றுக்கும் மேற்பட்ட அன்னிய நாட்டு அரசாங்கங்கள், தங்களின் கலாச்சாரத்தை பரப்புவதற்காக, பல முயற்சிகளை மேற்கொண்டனர். பாரம்பரியமான கல்வி முறை மாற்றி அமைக்கப்பட்டு, ஆங்கில மொழி சார்ந்த கல்வி முறை அமல்படுத்தப்பட்டது. ஒன்றுபட்ட இந்தியாவை பிளவுபடுத்தும் நோக்கத்துடன், அரசியல் காரணங்களுக்காக, சம்ஸ்க்ருத மொழி பற்றிய தவறான கருத்துக்களை, மக்களிடையே பரப்பினர். இது போன்ற பல காரணங்களால், சம்ஸ்க்ருத மொழி வழக்கில் இல்லாமல் போய்விட்டது.

இந்திய நாடு ஆங்கிலேயர்களிடமிருந்து சுதந்திரம் அடைந்த பின்,ஹிந்தி, ஆட்சி மொழியாக அறிவிக்கப்பட்டது. அப்பொழுது, சம்ஸ்க்ருத மொழியை இந்தியாவின் ஆட்சி மொழியாக்க வேண்டுமென, அண்ணல் அம்பேத்கர், பேராசிரியர். நஸ்ருதீன் அஹமது, டாக்டர். கேஸ்கர் போன்றோர், முனைந்த பொழுது, அத்தீர்மானம், சில அரசியல் கட்சிகளால், தோற்கடிக்கப்பட்டது. பின்னர், ஆட்சி பொறுப்பை ஏற்றவர்களும், சம்ஸ்க்ருத மொழியின் பயன்பாட்டை வளர்ப்பதற்கான முயற்சிகளில், பெரிதும் ஈடுபடவில்லை. எடுத்துக்கொண்ட முயற்சிகளும், முழுமையாகச் செயல் படுத்தப்படவில்லை. சில தனிப்பட்ட அமைப்புகளின் முயற்சிகளினால், சம்ஸ்க்ருத மொழி, முழு அழிவிலிருந்து, இன்று வரை காப்பாற்றப்பட்டுள்ளது.

இன்று சம்ஸ்க்ருத மொழியானது, இந்து சமயம் சார்ந்த படைப்புக்களிலும், நிகழ்ச்சிகளிலும், அதில் தேர்ச்சி பெற்ற வல்லுனர்களிடம் மட்டுமே, வழக்கில் உள்ளது.

தமிழகத்தில் சம்ஸ்க்ருத மொழியின் நிலை

தமிழ் நாட்டின் பல பகுதிகளில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டுக் குறிப்புகளிலும் சம்ஸ்க்ருத மொழி எழுத்துக்கள், காணப்படுகின்றன. இதன் மூலம் தமிழகத்திலும் இம்மொழி வழக்கில் இருந்தது என்று அறியப்படுகின்றது.

சென்ற நூற்றாண்டின் தொடக்கத்தில், தமிழகத்தில், மொழி சார்ந்த மூன்று முக்கிய கருத்துக்கள் முன்னிலைப் படுத்தப்பட்டன.

  • வடமொழி எதிர்ப்பு
  • ஆரியச் சார்பு சிந்தனைகள் எதிர்ப்பு
  • கடவுள் மறுப்புக் கொள்கை

வடமொழி எதிர்ப்பு

தமிழ் நாட்டில் கண்டெடுக்கப்பட்டுள்ள வரலாற்று சின்னங்களில், பிராகிருதம், பிராமி, தமிழ் பிராமி, தமிழ் வட்டெழுத்து, கிரந்தம், கிரந்தத் தமிழ், மணிப்பிரவாளம், தேவநாகரி போன்ற பல எழுத்து நடைகள் காணப்படுகின்றன. சம்ஸ்க்ருத மொழியைக் காட்டிலும், தமிழ்மொழி சார்ந்த குறிப்புகள் அதிகம் காணப்படுவதால், தமிழ் இலக்கியங்களில்,   சம்ஸ்க்ருத மொழியானது, வடமொழி என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும், இவ்விரு மொழிகளுக்கு இடையே ஆரோக்கியமான பரிவர்த்தனைகள் இருந்துள்ளன என்பது, திருக்குறள், ஆத்திச்சூடி, கம்ப ராமாயணம் போன்ற இலக்கியங்களில் கையாளப்பட்டுள்ள சொற்கள் மற்றும் பாடல் வரிகள் மூலம் நிரூபணமாகின்றது. பண்டைக் காலப் படைப்புகளில் சில வடமொழிச் சொற்களும் மத்திய மற்றும் நவீன காலப் படைப்புகளில் பல வடமொழிச் சொற்களும் காணப்படுகின்றன.

தமிழ்ப்படைப்புகளில் வடமொழிச் சொற்களை அறவே தவிர்க்க வேண்டும் என்ற கருத்தும், அச்சொற்களை தேவைகளுக்கு ஏற்றார் போல், தமிழின் தனித்தன்மைக்கு ஊறு விளைவிக்காத அளவுக்கு பயன்படுத்துவது தவறல்ல என்ற ஒரு கருத்தும், இன்றளவும் விவாதிக்கப்படுகிறது. வடமொழிச் சொற்களை பயன்படுத்துவது தவறல்ல என்ற கருத்திற்கு ஒப்பப் பொருள்பட அமைந்துள்ளது தொல்காப்பியரின் கீழ்க்கண்ட பாடல் வரிகள்.

இயற்சொல் திரிசொல் திசைச்சொல் வடசொல் என்று
அனைத்தே செய்யுள் ஈட்டச் சொல்லே.

ஆரியச் சார்பு சிந்தனைகள் எதிர்ப்பு

சம்ஸ்க்ருத மொழியானது ஆரியர்களின் மொழி, தேவ பாஷை என்ற ஒரு கருத்து புதிதாக முன்வைக்கப்பட்டது. ஆரியர் என்றால் ‘போற்றுதலுக்கு உரியவர், தலைவர்’ என்றே பொருள் என்று குறுந்தொகை, தேவாரம், கம்பராமாயணம், திருவாசகம் போன்ற தமிழ் நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. எனினும், அரசியல் காரணங்களுக்காக, ஆரியம் என்பது ஒரு இனம் என்றும், தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு ஒவ்வாத சில சிந்தனைகள் உடையது என்றும், ஒரு கருத்து பரப்பப்பட்டது. மரபணு விஞ்ஞானிகளும், இந்த வாதத்திற்கு எந்த விதமான அறிவியல் சான்றுகளும் இல்லை என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர்.  எனினும், இந்த கருத்தின் அடிப்படையில், பல இலக்கியங்களில் காணப்பட்ட, சொற்கள் மற்றும் பாடல் வரிகள் வெளிப்படுத்தும் சிந்தனைகளில், சிலவற்றை, ஆரியச் சார்பு சிந்தனைகள் என்று இனம் காணும் முயற்சியில், சில தமிழறிஞர்கள், ஈடுபட்டனர்.

கடவுள் மறுப்புக் கொள்கை

கடவுள் மறுப்புக் கொள்கை என்பது ஒரு இயக்கமாக உருவாகி, பல்வேறு ஆன்மீக மற்றும் சமயம் சார்ந்த படைப்புகளும், மறு ஆய்விற்கு உட்படுத்தப்பட்டன.

உதாரணத்திற்கு, திருவள்ளுவர் எழுதிய திருக்குறளுக்கு பரிமேலழகர் எழுதிய உரை, பல நூற்றாண்டுகளாக மிகச் சிறந்ததாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. எனினும், சென்ற நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழறிஞர் பலர், மேற்கூறிய மூன்று கருத்துக்களின் அடிப்படையில், பரிமேலழகரின் அவ்வுரையை, மறு ஆய்விற்கு, உட்படுத்தி, அவற்றில் கண்ட வடமொழிச் சார்பு, ஆரியச் சார்பு மற்றும் ஆன்மீகச் சார்பு சிந்தனைகளின் தாக்கங்களை, இனம் கண்டு, அவற்றை விலக்கி, புத்துரைகள் எழுதினர்.

அத்துடன் நில்லாமல், மேற்கூறிய கருத்துக்களுடன், உடன்படாத, உரையாசிரியர்களுக்கும், அவர்களின் பதிவுகளுக்கும் முக்கியத்துவம் மறுக்கப்பட்டது.

மேற்கூறிய காரணங்களால்,, தமிழ் மற்றும் சம்ஸ்க்ருத மொழிகளுக்கு இடையே அதுவரை நிலவிய ஆரோக்கியமான பரிவர்த்தனைகள் பெரிதும் தடைப்பட்டன. இலக்கிய மொழியாக்கங்களில், தேக்க நிலை உண்டானது.

இன்றைய நிலை

சென்ற 10 ஆண்டுகள் வரை, மொழி ஆராய்ச்சியாளர்களால் மட்டுமே திரட்டக்கூடிய தகவல்கள், இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியால், வலை தளங்களிலும், தகவல் களஞ்சியங்களிலும், காணப்படுகின்றன. அத்தகைய வலை தளங்களில், ஒவ்வொரு கருத்திற்க்கான வரலாற்றுப் பின்னணிகளும், விவாதங்களும், மாற்றுக்கருத்து பற்றிய விமர்சனங்களும், காணப்படுகின்றன. சாமானிய மக்களால் கூட சரித்திர உண்மைகளை எளிதாக அறிந்து கொள்ள முடியும்.

திருவள்ளுவரின் கூற்று,

எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும்
அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு

 என்பது இப்பொழுது சாத்தியப்பட்டுள்ளது.

இந்த வாய்ப்பினை முழுவதம் பயன்படுத்தி, தமிழ் மற்றும் சம்ஸ்க்ருத மொழிகளுக்கு இடையே சென்ற நூற்றாண்டு வரை, நிலவிய ஆரோக்கியமான பரிவர்த்தனைகளை, மீண்டும், புதுப்பிக்க, முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

ஏன் இந்தத் தொகுப்பு ?

வடமொழிச் சொற்களை தேவைகளுக்கு ஏற்றார் போல் பயன்படுத்துவது தமிழின் வளர்ச்சிக்கு சாதகமாகவே அமையும் என்கின்ற கருத்தினை அடிப்படையாகக் கொண்டது இந்தத் தொகுப்பு.

கீழ்க்காணும் இணையதள முகவரியில், தமிழ்மொழியின் பேச்சு வழக்கில் அன்றாடம் பயன்படுத்தும்  900+ சம்ஸ்க்ருத சொற்களும், தமிழ்மொழியில் அதற்கு நிகரான சொற்களும் மற்றும் ஆங்கில மொழியில் அவற்றின் பொருளும் கொடுக்கப்பட்டுள்ளன..

அதே இணையதள முகவரியில்,மேலும் சில கட்டுரைகள் கீழ்க்கண்ட தலைப்புக்களில் இடம் பெற்றுள்ளன.

  • தமிழ் மற்றும் சம்ஸ்க்ருதம் பற்றிய சிலஅறிஞர்களின் கருத்துக்கள்
  • இலக்கியப் படைப்புக்களில் சம்ஸ்க்ருத சொற்கள்
  • இந்தியமொழிகள் – ஒரு பார்வை
  • அன்றாட வாழ்வில் சம்ஸ்கிருத மொழி
  • வரலாற்றுச் சின்னங்களில் சம்ஸ்க்ருதம்

இவைகள், சம்ஸ்கிருதம், பற்றிய மேலும் பல அரிய தகவல்களை அளிக்கின்றன.

தமிழர்களாகிய நாம் ஏன் சம்ஸ்க்ருதம் பயில வேண்டும் ?

இன்றைய தமிழர்களின் நிலையை ஆராயும் பொழுது, பொருளாதார அடிப்படையில், அவர்களை இரு கூறாகப் பிரிக்க முடியும். முதல் பிரிவு, தமிழ் மொழி மட்டுமே அறிந்து ,அதில் சரளமாக பேசக்கூடியவர்கள். இரண்டாம் பிரிவில், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரண்டு அல்லது அதற்கும் மேற்பட்ட மொழிகளில் தேர்ச்சி பெற்று, அம்மொழிகளில், சரளமாகவும் பேசக்கூடியவர்கள். இன்றைய பொருளாதார வளர்ச்சி, பெரும்பாலும் ,இரண்டாம் பிரிவில் உள்ள தமிழர்களை மட்டுமே, சென்றடைந்து உள்ளது. இதில் வேதனையான உண்மை, முதல் பிரிவில் 80 சதவிகிதத்திற்கும், மேற்பட்டோர் உள்ளனர். இவர்கள், பொருளாதார வளர்ச்சியில், ஒரு தேக்க நிலையை அடையக் கூடிய அபாயம் உள்ளது.

இரண்டாவதாக, இந்தியாவின் மற்ற மாநிலங்களில், பள்ளிகளிலும், கல்லூரிகளிலும், சம்ஸ்க்ருதமொழி, ஒரு பாடமாக மீண்டும் கற்பிக்கப்படுகின்றது. அம்முயற்சிகள், மக்களிடையே நல்ல ஆதரவையும் பெற்றுள்ளன. தமிழர்களாகிய நாமும், இந்த முயற்சியில், முழுமையாக ஈடுபட்டு, மொழி ரீதியாக, தேசிய நீரோட்டத்தில் நம்மை இணைத்துக்கொள்ள வேண்டும்.

 இதற்க்கு நாம் என்ன செய்ய வேண்டும் ?

 ஆங்கிலத்தில், ‘The strength of a chain, lies in the strength of its, weakest link’ என்று சொல்வதுண்டு. அதாவது, ஒரு சங்கிலியின் வலிமை, அந்தச் சங்கிலியில் கோர்க்கப்பட்டுள்ள ஒவ்வொரு வளையத்தின் வலிமையை பொறுத்தே அமையும். வலிமையற்ற ஒரே ஒரு வளையத்தால், அந்த சங்கிலியின் மற்ற வளையங்களின் முழு வலிமையை உபயோகிக்க முடியாமல் போகும். அதுபோன்று, 80 சதவிகித தமிழர்கள், தங்களது திறமைகளுக்கு, தமிழ்நாட்டுக்குள் மட்டுமே, வாய்ப்புகளைத் தேடும் ஒரு நிலை உள்ளது. அந்நிலையில் இருந்து விடுபட, இந்தியாவின் மற்ற பகுதிகளிலும், வாய்ப்புகளைப் பெறுவதற்கு, தங்களை தகுதி உள்ளவர்களாக, தயார்ப் படுத்திக் கொள்ள வேண்டும்.

 இந்த இலக்கை அடைவதற்கு, ஒன்றுக்கும் மேற்பட்ட அணுகுமுறைகள் உள்ளன.   அவற்றில் ஒன்று, இந்தியாவின் மற்ற பகுதிகளில், வழக்கத்தில் உள்ள மொழிகளில் ஓரளவேனும் பயிற்சி பெற வேண்டும். மற்ற பகுதிகளில், ஒன்றுக்கு மேற்பட்ட மொழிகள் வழக்கத்தில் உள்ளதால், பெருவாரியான அம்மொழிகளின் வேராக (Root) கருதப்படுகிற, சம்ஸ்க்ருத மொழியை கற்க, முயற்சி செய்ய வேண்டும். சம்ஸ்க்ருத மொழியில் பயிற்சி பெறுவது, மற்ற மொழிகளின் பயிற்சியை துரிதப்படுத்தும் ஒரு திறவுகோல் ஆகும். மொழி ஆராய்ச்சியாளர்களின் ஆய்வில், அத்தகையப் பயிற்சி, இந்தியாவின் 75 சதவிகித மக்களுடன், மொழி ரீதியான தொடர்பை ஏற்படுத்தும் ஒரு வாய்ப்பை உருவாக்கும் என்று கணித்துள்ளனர்.

இன்றைய காலக் கட்டத்தில், வெளி நாடுகளில் வேலை வாய்ப்பு மற்றும் குடியுரிமை பெற, அந்நாட்டு மொழிகளை, பல லட்சங்கள் செலவழித்து, பயின்று வரும் நம் இந்திய நாட்டு மக்கள், பாரம்பரியமான, நமது சம்ஸ்க்ருத மொழியைப் பயில வேண்டும். அதன் மூலம் அம்மொழியின் படைப்புகளில் புதைந்துள்ள தகவல் களஞ்சியங்களைக் கொண்டு, உலக மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தப் பாடு படவேண்டும்.

சம்ஸ்க்ருத மொழியை பயில விரும்புவோருக்கு, அப்பயிற்சியை, இலவசமாக வழங்கும் சில நிறுவனங்களும் உள்ளன. அந்தப் பயிற்சிக்கான கால அவகாசமும் ஓரிரண்டு மாதங்களே. பேச்சு வழக்கில் நாம் அன்றாடம் பயன்படுத்தும் சொற்றொடர்களில், சம்ஸ்க்ருத சொற்கள், பரவலாக உள்ளதைக் காண முடியும். மேலும் சில, சொற்களையும், சொற்றொடர்களையும் பயின்று, சம்ஸ்க்ருத மொழியில், அடிப்படைத் தேர்ச்சி பெற்று, அதன் மூலம், மற்ற மொழிகளையும் பயில்வோம்.

மேற்கூறிய அணுகுமுறையைக் கடைப்பிடிக்க விரும்புவோர், அருகிலுள்ள சம்ஸ்க்ருத பயிற்சி மையத்தில் / பயிற்சி முகாம்களில் தொடர்பு கொண்டு பயன் அடையலாம். வலைதளம் மூலமாகவும் சில நிறுவனங்கள் பயிற்சி வகுப்புகள் நடத்துகின்றன. அப்பயிற்சிகளின் மூலமாக, நம்முடைய பன்மொழித் திறமைகளை வளர்த்துக் கொண்டு, நமது திறமைகளுக்கான வாய்ப்பைப் பெருக்கிக்கொள்வோம். பாரதியின் “தமிழன் என்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா” என்ற கனவை, நிறைவேற்றுவோம்.

மேலும் விவரங்கள் https://sanskritroots.com/sanskrit-and-tamil/ என்கின்ற இணையதள முகவரியில்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s